Published : 03 Jan 2020 03:02 PM
Last Updated : 03 Jan 2020 03:02 PM

இராக்கிலிருந்து தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அழைப்பு

இராக்கில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. மேலும் சுலைமான் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் எச்சரித்து மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தது.

இந்நிலையில் இராக்கில் உள்ள தஙகள் நாட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, “இராக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமானம் மூலம் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அது முடியாவிட்டால் வேறு பாதையைத் தேர்ந்தெடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x