தளபதி சுலைமான் கொலை: 'அபாயத்தை தீவிரப்படுத்தி பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டீர்கள்' - அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் :படம் ஏஎன்ஐ
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் :படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானை ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்து அமெரிக்கா ஆபத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதத்தில் முட்டாள்தனத்தைச் செய்துவிட்டது என்று ஈரான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர்.

அதற்குப் பதிலடியாக இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

இதையடுத்து, ஈரான் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு தெஹ்ரானில் கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளது. ஈரான் அரசின் செய்தி ஊடகமான ஐஎஸ்என்ஏ அமைப்பின் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான கேவன் கோஸார்வி கூறுகையில், "பாக்காத்தில் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்க ராணுவம் கொலை செய்தது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த ஈரான் அரசின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் ட்விட்டரில் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், " ஐஎஸ்ஐஎஸ், அல் நுஷ்ரா, அல்கொய்தாவுக்கு எதிராகப் போராடி வந்த ஜெனரல் சுலைமானைக் கொலை செய்து, சர்வதேச தீவிரவாதத்தை அமெரிக்கா செய்துள்ளது. இது மிகத்தீவிரமான பேராபத்தை விளைவிக்கும், ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகப்படுத்தும் முட்டாள்தனமான செயல். நேர்மையற்ற முறையில், யோசிக்காமல் செய்யும் சாகசங்களுக்கெல்லாம் அமெரிக்கா பொறுப்பேற்று அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்" என எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரான் புரட்சிகரப் படையின் முன்னாள் கமாண்டர் மோசின் ரேஸாய் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " தளபதி குவாசிம் சுலைமானைக் கொன்ற அமெரிக்காவுக்கு எதிராக மூர்க்கத்தனத்தனமாகப் பழிவாங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in