

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில்தான் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமானைக் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்தோம் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆதரவுப்படையைச் சேர்ந்த வீரர்கள் சூறையாடினர். இதற்குப் பதிலடி தரும் வகையில், இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து இதுவரை ஈரான் அரசு எந்தவிதமான அறிக்கையையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈராக்கில் உள்ள அமெரிக்க உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், வீரர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கு ஜெனரல் சுலைமான் திட்டமிட்டங்கள் வகுத்து வந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. அதுமட்டுமல்லாமல் ஈராக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள், கூட்டுப்படையினர் கொல்லப்படவும், தீவிரமான காயங்கள் ஏற்படவும் ஜெனரல் சுலைமானும், அவரின் குட்ஸ் படையும் காரணம் எனத் தெரியவந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் அமெரிக்கா தற்காப்பு நடவடிக்கை எடுத்து, பாக்தாத் விமானநிலையம் நள்ளிரவு விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்காவில் தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட குட்ஸ் படையின் தளபதி ஜெனரல் சுலைமான் கொல்லப்பட்டார். எதிர்காலத்தில் ஈரான் தாக்குதல் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது " எனத் தெரிவித்துள்ளது
ஈரானின் குட்ஸ் படையின் தளபதியின் சுலைமான் கொல்லப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் தேசியக் கொடியை மட்டும் பதிவிட்டார்.
ஈரான் நாட்டின் 2-வது அதிகாரம் படைத்த தளபதியாக சுலைமான் பார்க்கப்பட்டார்.அதாவது மூத்த தலைவரான அயாத்துல்லா அலி காமேனுக்கு அடுத்தபடியாக சுலைமான் கருதப்பட்டார். அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் தரப்பில் இருந்து என்ன விதமான பதிலடி இருக்கும் எனத் தெரியவில்லை.
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது