

தைவானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலியாகினர்.
தைவானில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் UH-60 இன்று (வியாழக்கிழமை) யிலன் நகரில் காலை 9 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் தடுமாறிய நிலையில் மலைப் பகுதியில் தரையிறங்கியது.
ஹெலிகாப்டரில் இருந்தவர்களைத் தேடும் பணி நடந்து வந்த நிலையில் மூத்த ராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலியாயினர். பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனை தைவானில் இயங்கும் மத்திய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பலியானவர்களில் தைவானின் மூத்த ராணுவத் தலைவரான 62 வயதான ஷின் யீ மிங்கும் ஒருவர். இவர் கடந்த ஆண்டுதான் ராணுவத் தலைமைப் பொறுப்பில் பதவியேற்றார்.
விபத்து குறித்து தைவான் அதிபர் சாய் இங் வென் கூறும்போது, “விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விபத்து இயந்திரக் கோளாறு அல்லது சுற்றுச்சூழல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தைவான் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.