

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தென் கடற்கரைப் பகுதியில் காட்டுத் தீயின் தீவிரம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் மாயமாகி உள்ளனர். இவ்வாரத்தில் மட்டும் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள தென் கடற்கரைப் பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகி வருவதால் வெப்பம் அதிமாகும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீயை அணைக்க அனைத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத் தீயை அணைக்கப் போராடுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதே சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார்.