

புத்தாண்டு பிறந்துள்ள இந்த வேளையில் உலகம் முழுவதும் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து வரும் அகதிகளின் இதயங்களில், இதெல்லாம் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை ஒளி சுடர் விட்டுள்ளது. அதேநேரம், உள்நாட்டுப் போர் காரணமாக உருவான சிக்கல்கள் மேலும் அதிகரிக்குமோ என்ற பயமும் பணக்கார நாடுகள் தங்களை ஏற்றுக் கொள்வதற்கு அரசியல் துணிவு காட்ட தயங்குவதால் உருவான அச்சமும் அகதிகளை சூழ்ந்துள்ளது.
உலக மக்களுக்கு போப் பிரான்ஸிஸ் விடுத்துள்ள கிறிஸ்துமல் நற்செய்தியில், மத ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உள்நாட்டுப் போர் காரணமாகவும் துன்பத்துக்கு ஆளான அகதிகள் மீதான வெறுப்பை விலக்கி அன்பு காட்ட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
அநீதி காரணமாகத்தான் அகதிகள் பாலைவனங்களையும் கடல்களையும் கடந்து வெளியேறி வருகிறார்கள். பல நேரங்களில் வரும் வழியிலேயே செத்தும் மடிகிறார்கள். அவர்களை தடுப்புக் காவல் முகாம்களில் தங்கவைத்து அடிமைகளைப் போல நடத்துவதும் அநீதிதான். சொந்த நாடுகளைத் துறந்து, கவுரவமான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் வரும் அகதிகள் மீண்டும் அதே நிலையை சந்திக்க வேண்டியிருக்கிறது என பிரான்ஸிஸ் கூறியிருக்கிறார்.
மனித வரலாற்றிலேயே அகதிகளுக்கு மிகவும் மோசமான கால கட்டம் இது. ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர், பாதுகாப்பும் நல்ல வாழ்க்கையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தாங்கள் பல காலம் வசித்த நாடுகளைவிட்டு அகதிகளாக வெளியேறி வருகிறார்கள். உலகம் முழுவதும் தற்போது 7 கோடி பேர் அகதிகளாக வாழ்கிறார்கள். மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்கே திரும்புவதற்கு அவர்கள் விரும்பினாலும் அதற்கேற்ற சூழல் அங்கு இல்லை. மீண்டும் அங்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில்தான் தவித்து வருகிறார்கள் அவர்கள்.
சிரியாவில் ஏற்பட்டுள்ள அகதிகள் பிரச்சினை, அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் தொடங்கப்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 1.30 கோடிப் பேர் உதவியை எதிர் நோக்கியிருக்கும் அகதிகள் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப்பேர் குழந்தைகள். ஏறக்குறைய 60 லட்சம் சிரியா மக்கள் தங்களை அகதிகளாக அண்டை நாடுகளில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போதுமான வசதிகள் இல்லாத அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கல்வி வசதியோ, சுகாதார வசதியோ இங்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் இந்த அகதிகளை எந்த நாடுமே நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சிறிது காலம் முகாம்களில் வைத்திருந்துவிட்டு, மீண்டும் அவரவர் நாடுகளுக்கே திருப்பி அனுப்புவதில்தான் குறியாக இருக்கின்றன.
மியான்மரின் வடக்கு மாநிலமான ராக்கைன் பகுதியில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூனில் இருந்து இதுவரை 10 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். முஸ்லிம்கள் என்பதால் மியான்மர் அரசு தங்களை மத ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறுகின்றனர் இவர்கள். இவர்களில் 80 சதவீதம் பெண்களும் குழந்தைகளும். ஆனால் மியான்மர் ராணுவம் வேறு காரணம் கூறுகிறது. இன்னும் எத்தனை ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. மிகவும் வறுமையான சூழலில், விரக்தியின் எல்லையில் இருக்கிறார்கள். பெண்களும் சிறுமிகளும் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். கட்டாயத் திருமணம், பாலியல் வன்முறைகளுக்கு பலியாகி வருகிறார்கள் என ஆக்ஷன் எய்டு பங்களாதேஷ் என்ற தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு சிரியா மக்களும் ரோஹிங்கியா இனத்தவரும் மட்டும்தான் வாழ வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். ஆப்பிரிக்காவிலும் ஆசிய நாடுகளும் இன்னும் பல நாட்டவர் இதே நிலைக்கு தள்ளப்படும் நிலை வெகு தூரத்தில் இல்லை. ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வராமல் பணக்கார நாடுகள் அமைதி காத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு மனசும் இல்லை. இந்த நிலை மாறாவிட்டால், உலக புலம் பெயர்ந்தவர்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.