

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் திருப்பலி வழிபாட்டை கத்தோலிக்க திருச்சபையின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று அதிகாலை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களையும் குழந்தைகளையும் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். இதனிடையில் அவருடைய கைகளை இறுகப் பற்றி இழுத்தார் பார்வையாளர்கள் மத்தியில் நின்ற பெண் ஒருவர். இதனால் நிலைதடுமாறிய 83 வயதான போப் ஆண்டவர் அப்பெண்ணின் கைகளை உதறித் தள்ளிவிட்டார். சிறிது நேரம் பார்வையாளர்களிடம் இருந்து சற்றே விலகி நடந்து சென்றவர் மீண்டும் குழந்தைகளிடம் மட்டும் கைகுலுக்கியபடி நடந்து சென்றார்.
காணொலியாக பதிந்த இக்காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. போப் ஆண்டவரின் இந்த நடவடிக்கையை ஆதரித்தும் விமர்சித்தும் ட்விட்டரில் அடுத்தடுத்து பதிவுகள் குவிந்தன.- ஏஎப்பி