Published : 01 Jan 2020 11:01 AM
Last Updated : 01 Jan 2020 11:01 AM

ஈரானுடன் போர்?- ட்ரம்ப் பதில் 

மோதல்களுக்கு இடையே ஈரானுடன் போர் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் குறித்து ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

புளோரிடாவில் புத்தாண்டு மாலை நேர விருத்தில் கலந்து கொண்ட ட்ரம்ப்பிடம், ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர்.

இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, “ஈரானுடன் போரா? நிச்சயம் இது ஈரானுக்கு நல்ல யோசனையாக இருக்காது. நான் அமைதியை விரும்புகிறேன். போர் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

முன்னதாக, இராக்கில் ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது . இதில் பலர் பலியாகினர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தை ஈரான் ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கினர்.

இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஏதேனும் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டாலும் அதற்கான பெரிய விலையை ஈரான் கொடுக்க நேரிடும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய நிலையில், ஈரான் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. மேலும் ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுத சோதனைகள் நடத்தும் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x