

கொரிய எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தென்கொரியாவின் வலியுறுத்தலை ஏற்று வடகொரியா வருத்தம் தெரிவித்தது.
போர் பதற்றத்தைத் தடுக்க இரு நாடுகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தென்கொரியாவும் வடகொரியாவுக்கு எதிரான ஒலிபெருக்கி பிரசாரத்தை நிறுத்திக்கொள்வதாக கூறியது. அதே போல, போருக்கான ஆயத்த நிலையை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் தென்கொரிய வீரர்கள் மரணத்துக்கும் வடகொரியா வருத்தம் தெரிவித்தது.
1950களில் நடந்த கொரிய போருக்கு பின்னர், இரு நாடுகள் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இதனை மீறி கொரிய நாடுகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில், தென்கொரிய எல்லையில் கண்ணிவெடிகளை வட கொரியா புதைத்திருந்த பகுதியில் 2 தென்கொரிய வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வட மற்றும் தென்கொரிய எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது.
அறிவிக்கப்படாத போருக்கு தயாராக படைகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டார். வடகொரியா தாக்குதல் நடத்தினால், முழு பலத்துடன் பதில் தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு தென்கொரியா உத்தரவிட்டது.
பதற்றத்தைத் தவிர்க்க சீனாவின் உதவியை அமெரிக்கா கோரியது. இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் 4 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி இழுபறி ஏற்பட்டது.
கண்ணிவெடிகளை புதைத்த குற்றத்துக்கு வடகொரியா மன்னிப்பு கேட்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கு அர்த்தமில்லை என்று தென்கொரிய அதிபர் பார்க் கூயின் ஹை திட்டவட்டமாக தெரிவித்தார்.