Published : 31 Dec 2019 06:02 PM
Last Updated : 31 Dec 2019 06:02 PM

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: சுற்றுலா பகுதியில் சிக்கிக் கொண்ட மக்கள்

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் பிரபலமான சுற்றுலாப் பகுதியில் விடுமுறையைக் கொண்டாடுவதற்காகக் கூடிய ஆயிரம் பேர், காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா நகரான மலகுட்டாவில் காட்டுத் தீயில் 1000க்கும் அதிகமான நபர்கள் சிக்கிக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து விக்டோரியா அவசர மீட்புக் குழுவின் தலைவர் ஆண்டிரிவ் கூறும்போது, “கடற்கரைப் பகுதியில் மக்கள் சிக்கிக் கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணி வீரர்கள் மீட்புப் பணி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்” என்றார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிழக்கு ஜிப்ஸ்லாண்ட் மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக கடும் வெப்ப அலை நிலவுகிறது. இதன் காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், இப்பகுதிகளில் நிலவும் அனல் காற்று காரணமாக புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x