Published : 31 Dec 2019 02:44 PM
Last Updated : 31 Dec 2019 02:44 PM

உலகம் 2019: எங்கும் பரவிய போராட்ட அதிர்வலைகள்

2019 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்ட அதிர்வலைகள் தொடங்கி சுற்றுச் சூழல், பெண்ணுரிமை, அமைதி ஒப்பந்தங்கள், அரசியல் மாற்றங்கள் என முக்கியத் திருப்பு முனைகள் நடந்தேறின.

அவற்றின் தொகுப்பை இங்கு காணலாம்.

அதிகாரத்திற்கு எதிராகப் போராட்டத்தை கையில் எடுத்த இளம் தலைமுறை

2019 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக, பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் உலக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது ஹாங்காங் போராட்டம்.

குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் பெரும் ஜனநாயகப் போராட்டம் வெடித்தது.

போலீஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது.

இந்த சூழலில், சர்ச்சைக்குரிய இந்த மசோதா முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மத்திய அமெரிக்க அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது, இதில் தலைநகரின் பிளாசா இத்தாலியா சதுக்கத்தில் லட்சகணக்கான மக்கள் பேரணி சென்றனர். 1990-ல் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்த பேரணியாக இது கருதப்பட்டது.

சிலி மட்டுமல்லாது ஈக்வேடார் போன்ற நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மக்களால் நடத்தப்பட்டன.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக, போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஈரானிலும் பெட்ரோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் விதிகளில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களின்போது போராட்டக்காரகள் பலர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர்.

ஈரானை உலுக்கிய சஹர் கோடயாரி மரணம்

ஈரான் நாட்டில் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்குப் பெண்களுக்கு 1981-ம் ஆண்டு முதல் தடை இருந்து வந்தது. அந்நாட்டில் உள்ள பெண் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதை எதிர்த்து வந்தன.

ஈரானின் மைதானங்களில் விளையாட்டுகளைக் காண பெண்களுக்கு அனுமதி கோரி பல போராட்டங்களை நடத்தியவர் சஹர் கோடயாரி (28). இவர் 'புளு கேர்ள்' (அவருடைய விருப்பமான கால்பந்தாட்ட அணியின் சீருடை நிறம்) என்று அந்நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் சஹர் கோடயாரி, கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று தெரியவந்தது. இதனால் சஹர் நீதிமன்றத்தில் தீக்குளித்தார். அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். சஹரின் மரணத்துக்குப் பிறகு விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்கக் கோரிய போராட்டம் வலுப்பெற்றது.

இது பல நாடுகளிலும் எதிரொலித்தது. பல்வேறு கால்பந்தாட்ட அமைப்புகள் பெண்களுக்கு எதிரான ஈரானின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் காலபந்தாட்டத்தைக் காண அனுமதிக்கப்பட்டனர். சஹரின் மரணமே அதனை நிகழ்த்தியது.

பற்றி எரிந்த உலகின் நுரையீரல்

பிரேசிலில் அதிபராகப் பதவியேற்ற ஜெய்ர் போல்சோனரோ சூழலியல் விரோதப் போக்கைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற சில மணிநேரத்திலேயே, வனக் கொள்கையை வேளாண் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்து, அமேசான் அழிக்கப்படுவதற்கான தொடக்கப்புள்ளியை வைத்தார்.

மேலும், அமேசான் காடுகளை நியாயமான அளவில் பிரேசிலின் பொருளாதாரத் தேவைகளுக்காக சுரண்டிக்கொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் காடழிப்பு 11 ஆண்டுகளாக கணிசமான அளவில் தொடர்ந்து கொண்டு வருகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காலநிலை மாற்றத்தின் குறீயிடாக மாறிய கிரெட்டா துன்பர்க்

பூமியில் நாம் வெளிவிட்ட கரிம வாயுவினால் பூமியைப் பாதுகாத்து வந்த ஓசோன் படலம் கிழிந்து தொங்குகிறது. ஊடகங்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறிவிட்டன. இது பற்றி எந்தக் கவலையும்படாமல் உலகத் தலைவர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பது பற்றி மட்டும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதான கிரெட்டா உரையாற்றினார். இந்த உரைதான் அவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படக் காரணமாக இருந்தது.

டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரெட்டா துன்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பிரெக்ஸிட் தீர்மானித்த முடிவு!

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற பல முறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால், இந்த ஓட்டெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் பிரதமராகப் பதவியேற்றார்.

பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தெரசா மேவுக்கு ஏற்பட்டது போல அதே சிக்கல் போரிஸ் ஜான்ஸனுக்கும் ஏற்பட்டது.

ட்ரம்ப்புக்கு எதிரான பதவிப் பறிப்பு தீர்மானம்

அமெரிக்காவின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் டொனால்ட் ட்ரம்ப், பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது அதிபர் என்ற பட்டியலில் இடம் பிடித்தார். அதிபரின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுத்ததற்காகவும் இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஏமனில் அமைதி ஏற்பட உதவிய சவுதி

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இதில் ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

குர்துகளுக்கு எதிராக போரை அறிவித்த துருக்கி

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி திரும்பியது.

அப்போது, இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானம் எப்-16 வகையை இந்திய விமானி அபிநந்தன் மிக் ரக விமானத்தில் விரட்டிச் சென்று அதைச் சுட்டு வீழ்த்தினார்.

அதன்பின் விமானம் கோளாறு அடைந்த நிலையில், பாகிஸ்தான் பகுதியில் பாராசூட்டில் குதித்தார். அவரைப் பிடித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 நாட்களில் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்.

வரலாறு காணாத வறட்சியை சந்தித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

வறட்சி காரணமாக திரைப்படங்களில் வருவதுபோல் தண்ணீரைக் கொள்ளையடிக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

தொகுப்பு : இந்து குணசேகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x