Last Updated : 28 Dec, 2019 02:36 PM

 

Published : 28 Dec 2019 02:36 PM
Last Updated : 28 Dec 2019 02:36 PM

ஐ.எஸ் தலைவர் பாக்தாதியின் மரணத்திற்குப் பழிக்குப்பழி; 11 கிறிஸ்தவர்களுக்கு தூக்கு: கிறிஸ்துமஸ் மறுநாள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம்

அமெரிக்கப் படையினர் தேடுதல் வேட்டையின் போது உயிரிழந்த ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் இறப்புக்குப் பழிக்குப்பழியாக 11 கிறிஸ்தவர்களைத் தூக்கிலிடுவதாக கிறிஸ்துமஸ் மறுநாள் ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதக் குழுவில் இணைந்த ஜிஹாதிகள் வடகிழக்கு நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்கள் தூக்கிலிடப்பட்டதைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துவரும் சில தீவிரவாதக் குழுக்கள் தொடர்ந்து அரசுக்கும் மக்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சில மாதங்களாக, மேற்கு ஆப்பிரிக்கா மாகாணத்திலிருந்து செயல்பட்டு வரும் ஐஎஸ்டபிள்யூபி எனப்படும் ஐஎஸ் தீவிரவாதக்குழு கிறிஸ்தவர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது, இதற்காக நெடுஞ்சாலைகளில் சாலைத் தடைகளை அமைத்தல் மற்றும் தேடுதல்வேட்டைகளில் ஈடுபடுவதை நடத்துகிறது.

நைஜீரியாவின் வடகிழக்கில் இயங்கிவரும் ஐஎஸ் ஆயுதக் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதற்காக சோதனைச் சாவடிகளை அமைக்கும் நடைமுறை அதிகரித்துவருவதை ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை கண்டித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, போர்னோ மாநில தலைநகரான மைடுகுரியின் புறநகரில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களை தடுத்து நிறுத்தியபோது 6 பேரைக் கொன்றனர் மற்றும் இரண்டு உதவித் தொழிலாளர்கள் உட்பட 5 பேரைக் கடத்திச் சென்றனர்.

டிசம்பர் 5 ம் தேதி இதேபோன்ற தாக்குதலில், நைஜீரிய ராணுவ வீரர்கள் போல வேடமணிந்த ஐஎஸ்டபிள்யூஏபி தீவிரவாதிகள் மைதுகுரி அருகே ஒரு சோதனைச் சாவடியில் அவ்வழியே சென்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது தாக்குதலில் ஈடுபட்டதோடு வாகனங்களில் வந்த ஆறு சிப்பாய்கள் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க தொழிலாளர்கள் உட்பட எட்டு பேரை கடத்திச்சென்றதாக ஐஎஸ்டபிள்யூஏபி தீவிரவாதக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

காப்பாற்றகோரும் வீடியோ

இதே அமைப்பு, கடந்த வாரம் குழு 11 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கும் வீடியோவை வெளியிட்டது. அதில் தோன்றிய பள்ளி ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள தாங்கள் 11 பேரும் கிறிஸ்தவர்கள் என்று கூறினார். தங்களை நைஜீரிய அரசாங்கம் விடுவிக்க முயற்சி மேற்கொள்ளவேண்டுமென வீடியோவில் முறையிட்டார்.

தூக்கிலிடும் வீடியோ

இந்நிலையில் இந்த 11 பேரும் தூக்கிலிடப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. ஐ.எஸ்-உடன் இணைக்கப்பட்ட பிரச்சாரக் குழு அமக் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஆன்லைனில் வெளியிட்ட காட்சிகள், இஸ்லாமிய மாநில மேற்கு ஆபிரிக்க மாகாணத்தை (ஐ.எஸ்.டபிள்யு.ஏ.பி) இருந்து ஜிஹாதிகளால் 11 பேரை (ஆண்களை) சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டியது.

ஒரு நிமிடம் மட்டுமே ஒளிபரப்பான இந்த வீடியோ, முகமூடி அணிந்த ஒருவர், "இது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு செய்தி. ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மற்றும் அவரது செய்தித் தொடர்பாளர் ஆகியோரின் மரணத்திற்கு இது பதிலடி ஆகும்'' என்று அவர் கூறினார்.

நைஜீரிய அதிபர் அதிர்ச்சி

இதுகுறித்து நைஜீரிய அதிபர் முகம்மது புஹாரி நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளதாவது.

"வருத்தப்படாத, கடவுளற்ற, வெகுஜன கொலைகாரர்களின் கும்பல்களின் கைகளில் அப்பாவி பணயக்கைதிகள் கொல்லப்பட்டதால் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். எந்த சூழ்நிலையிலும், பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவதன் மூலம் எங்களை பிளவுபடுத்தமுடியாது, ஏனெனில் இந்த காட்டுமிராண்டித்தனமான கொலையாளிகள் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள்.

இந்த தீய செயல்களின் முதுகெலும்பை உடைக்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.''

இவ்வாறு நைஜீரிய அதிபர் முகம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x