சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் வருகை

சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் வருகை
Updated on
1 min read

சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபர்ஹான் அல் சவுத் ஒருநாள் பயணமாக பாகிஸ்தான் வந்தடைந்தார்.

மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிக் உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் பின் முகமத் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகனுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொள்ள இருந்தார். இந்நிலையில் கடைசி நேரத்தில் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை.

சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டலால்தான் பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது என்று துருக்கி அதிபர் எர்டோகன் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசிய உச்சி மாநாட்டிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் வருகை தந்தார்.

பாகிஸ்தான் வந்தடைந்த சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபர்ஹான் அல் சவுத்தை பாக். அமைச்சர் ஷா மெமூத் குரேஷி விமான நிலையம் சென்று வரவேற்றார். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தில் இரு நாட்டு உறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள் என்று பாகிஸ்தானின் பிரபல ஊடகமான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பிற தலைவர்களை ஃபர்ஹான் அல் சவுத் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட இஸ்லாம் நாடுகள் பங்கேற்ற மலேசிய உச்சி மாநாட்டிலிருந்து பாகிஸ்தான் விலகியதற்காக நன்றி தெரிவிப்பதே சவுதி வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in