ஜமால் கொலை வழக்கு: சவுதியின் தீர்ப்பை விமர்சித்த துருக்கி

ஜமால் கொலை வழக்கு: சவுதியின் தீர்ப்பை விமர்சித்த துருக்கி
Updated on
1 min read

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கைக் கண்காணிப்போம். இந்த வழக்கில் சவுதி வழங்கிய தீர்ப்பு மோசடியானது என்று துருக்கி விமர்சித்துள்ளது.

உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சவுதி தீர்ப்பு வழங்கியது.

இதில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளின் பெயரைக் கூட சவுதி வெளியிடவில்லை. இந்த நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதி வழங்கிய தீர்ப்பை துருக்கி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து துருக்கியின் தகவல் தொடர்புத் துறை இயக்குனர் ஃபஹ்ரெதின் அல்தூன் கூறும்போது, “ஜமால் கொலை வழக்கை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். ஜமால் கொலை வழக்கில் சவுதி வழங்கிய தீர்ப்பு ஒரு மோசடி. உளவுத்துறைக்கான அவமானம்” என்று விமர்சித்துள்ளார்.

ஜமால் கொலை செய்யப்பட்ட பின்னணி

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்தது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்தது.

இந்நிலையில் ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் நான் முழுப் பொறுப்பை ஏற்கிறேன். ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன் என்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதிலளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in