

வங்கதேச விடுதலைப் போரில் எவ்வளவுபேர் இறந்தனர் என்பது குறித்து மிகவும் மாறுபட்ட கருத்துகள் நிலவு கின்றன. 26,000 பேர் இறந்தனர் என்கிறது பாகிஸ்தான். இல்லை முப்பது லட்சம் பேர் என்றன இந்தியாவும், வங்கதேசமும்.
பத்து லட்சம் பேர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று கருதுகிறார்கள் பல அரசியல் நோக்கர்கள். எனினும் நடந்தது இனப்படுகொலை என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இரண்டு லட்சம் வங்கதேச பெண்கள் பாகிஸ்தான் ராணுவத் தினரால் பலாத்காரம் செய்யப் பட்டனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். பாகிஸ்தான் ராணுவத் தினர் ‘பாலியல் அடிமைகள்’ என்ற பெயரில் சில பெண்களை தொடர்ந்து தங்கள் அடிமைகளாக வைத்துக் கொண்டிருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
வங்காள அறிஞர்களையும், மாணவர்களையும் குறிவைத்து வீழ்த்தியது பாகிஸ்தான். காரணம் கிழக்கு பாகிஸ்தான் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு சிலிர்த்து நின்றதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம் என்று நம்பியது. உருது மட்டுமே தேசிய மொழியாக்கப்பட்டதற்கு கிழக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இவர்கள் முக்கிய காரணம் என்று கருதப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டிருந்த முஜிபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். வங்க தேசத்தின் முதல் பிரதமரானார்.
சுதந்திரம் பெற்றதை வங்கதேசம் கோலாகலமாகக் கொண்டாடியது. ஆனால் விரைவிலேயே நாட்டின் பிரச்னைகள் பயமுறுத்தத் தொடங்கின. போரில் வீடிழந்தவர்களுக்குத் தகுந்த இடம் கொடுக்க வேண்டியிருந்தது. கூடவே, ஊழலுக்கும் இடம் கொடுத்து விட்டதாக முஜிபுர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தான் பதவியேற்ற சில ஆண்டுகளில் ‘அதிபருக்கே முழு அதிகாரம்’ என்கிற வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, சூட்டோடு சூடாகத் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, தன்னையே அதிபராகவும் அறிவித்துக் கொண்டார் முஜிபுர் ரஹ்மான்! அதுமட்டுமல்ல... நாட்டின் அரசியல் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தினார். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தடை!
மக்களைக் கவர்ந்த மகத்தான தலைவர்தான் முஜிபுர் ரஹ்மான். ஆனால், பதவிக்கு வந்தபின் தான் இப்படிச் செய்ய நேர்ந்ததை நியாயப்படுத்தினார். தனிநாடான பின் தங்களது தாய்நாடு சொர்க்கமாக மாறிவிடும் என்று கனவு கண்டிருந்த வங்கதேச மக்கள் திகைத்தனர்.
இந்த நிலையில் ஜியா உர் ரஹ்மான் ‘வளரத்’ தொடங்கினார். வங்கதேச சரித்திரத்தில் அழுத்தமாகக் கால் பதித்தவர் அவர். தவிர அவரது மனைவியும் அந்த நாட்டின் முக்கிய சக்தி. எனவே ஜியாவின் பின்னணியைச் சற்று விரிவாகவே பார்க்கலாமே.
ஜியா உர் ரஹ்மான் வங்கதேச முதல் ராணுவத் தளபதி. ராணுவ சர்வாதிகாரி என்றும் வைத்துக் கொள்ளலாம். முஜிபுர் ரஹ்மானின் சார்பில் நாட்டின் விடுதலையை அளித்தவர் இவர்தான் என்று பார்த்தோம். (பாகிஸ்தானின் அதிபராக 1978லிருந்து 1988 வரை இருந்த ஜியா உர் ரஹ்மானோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இருவருமே ஜியா என்று குறிப்பிடப்பட்டவர்கள் என்பது வேறு விஷயம்).
சிறு வயதில் ஜியா உர் ரஹ்மான் மிகவும் அமைதியானவராக பிறருடன் அதிகம் பழகாதவராக இருந்திருக்கிறார். கல்கத்தாவில் படித்திருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து முஸ்லிம் நாடான பாகிஸ் தானின் குடிமகனாக வேண்டும் எனத் தீர்மானித்து கராச்சிக்குச் சென்றார். (பாகிஸ்தானின் முதல் தலைநகரம் அதுதான்).
பதினாறாம் வயதுவரை கராச்சியில் உள்ள பள்ளியில் படித்துவிட்டு அங்கிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தார். கூடவே அவர் சேர்ந்தது பாகிஸ்தான் ராணுவ அகாடமியில்தான்.
பின்னர் கலீதா மஜும்தார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது கலீதா வுக்கு வயது 15தான். ஜியா பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்ட னாகி இருந்தார். பாகிஸ்தான் ராணுவ அகாடமியின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக விளங் கினார்.
ஒருமுறை கிழக்கு பாகிஸ் தானுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பலரும் ராணுவத்தை ஆதரிக்காத முறையிலேயே நடந்து கொண்டதைப் பார்த்தார். கிழக்கு பாகிஸ்தானின் வருமானத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்கே செலவிடப் படுகிறது என்ற எண்ணம் இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார். தவிர பாகிஸ்தான் ராணுவத்தில் வங்காளிகள் குறைவாகவே இருப்பதைக் கவனித்து இந்த விகிதத்தை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் - 1957ல் - கிழக்கு பாகிஸ்தானுக்கே இவருக்கு பணி மாற்றம் ஏற்பட்டது. (இந்தக் காலகட்டத்தில் 23 வயதாகி இருந்த கலீதா தனது முதல் மகனை பெற்றெடுத்தார்). அதற்குப் பிறகு ஜெர்மானிய ராணுவம், பிரிட்டிஷ் ராணுவம் போன்றவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார் ஜியா.
பின்னர் அவர் பாகிஸ்தான் திரும்பியபோது மேற்கு - கிழக்கு பாகிஸ்தான் மக்கள் உணர்வுகளால் வேறுபட்டு கொதி நிலையை அடைந்ததைக் கண்டார். அதுவும் போலா புயலைத் தொடர்ந்து மிகத் தாமதமாக ஆட்சியாளர் களிடமிருந்து கிடைத்த உதவிகள் கிழக்கு பாகிஸ்தான் மக்களை வெறுப்படைய வைத்திருந்தது.
இதுபோன்ற சூழல்கள் ஜியாவின் மனதை மாற்றி இருந்தன. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மனநிலை அவருக்குத் தோன்றியிருந்தது. முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக்கில் சேர விழைந்தார். அதன் தீவிர ஆதரவாளர் ஆனார். பின்னொரு கட்டத்தில் தனக்கு மேல்நிலையில் இருந்த ராணுவ அதிகாரிகளையே கைது செய்யவும் முற்பட்டார்.
ஆகஸ்ட் 15, நமக்குச் சுதந்திர தினம். ஆனால் 1975ல் அந்த தினம் வங்கதேசத்துக்கு கருப்பு தினமாக விடிந்தது. அன்று முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார்.
(உலகம் உருளும்)