

அணு ஆயுத ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஈரான் உறுதியாக இருக்குமாறு ஜப்பன் பிரதமர் ஷின்சே அபே கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவுடனான பலத்த மோதல்களுக்கு இடையே அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானுக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றடைந்த ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானிக்கு ஜப்பான் அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுடனான சந்திப்பில் இருதரப்பு உறவு, அணுஆயுத ஒப்பந்தம் குறித்து ஹசன் ரவ்ஹானி ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கூறும்போது, ”ஈரான் 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட அணு ஆயுத சோதனை உடன்படிக்கைகளில் மேற்கொண்ட வாக்குறுதிகளில் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றத்தை தணித்து அமைதியை நிலை நாட்ட ஜப்பான் தன்னால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஈரான் தலைவர் ஒருவர் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
அமெரிக்கா - ஈரான் மோதல்
அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார்.
இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.