

அமெரிக்காவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் இன்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி ஜப்பான் பிரதமரைச் சந்திக்கிறார்.
ஈரானில் கடந்த அக்டோபர் மாதம் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நிலவிய பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, ஜப்பானில் இப்பயணத்தை ஹசன் ரவ்ஹானி மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை ஹசன் ரவ்ஹானி சந்திக்கிறார். இந்நிலையில் ஹசன் ரவ்ஹானியின் ஜப்பான் பயணம் குறித்து ஈரான் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கூறும்போது, “அதிபரின் ஜப்பான் பயணத்துக்கும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஈரான் தலைவர் ஒருவர் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார்.
இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.