

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பில் அவர் எவ்வாறு கொல்லப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2016 ஆம் ஆண்டு முதல் முஷாரப், துபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முஷாரப் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் அவர் எவ்வாறு கொல்லப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
167 பக்கங்கள் கொண்ட முஷாரப்புக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு பக்கத்தில் , ''முஷாரப் நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை தீர்ப்புக்கு முன்னரே இறந்துவிட்டால், அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்டு இஸ்லமாபாத்தில் உள்ள சதுக்கத்தில் 3 நாட்கள் துக்கிலிடப்பட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய வரிகளை பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் கடுமையாக விமர்சித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.