பதவி நீக்கக்கோரும் தீர்மானம்; தனக்கு எதிராக செனட் சபை வாக்களிக்காது: ட்ரம்ப் நம்பிக்கை

பதவி நீக்கக்கோரும் தீர்மானம்; தனக்கு எதிராக செனட் சபை வாக்களிக்காது: ட்ரம்ப் நம்பிக்கை
Updated on
1 min read

பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் தனக்கு எதிராக செனட் சபை வாக்களிக்காது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “அமெரிக்க செனட் சபை வழக்கமான நியாயமான நடவடிக்கையின்படி செயல்படும் என்றும் பதவி நீக்கக்கோரும் தீர்மானத்தில் தனக்கு எதிராக செனட் சபை வாக்களிக்காது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் இருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எவ்வாறு அயராது உழைக்கிறாரோ அவ்வாறே தொடர்ந்து உழைப்பார்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது எழுந்தன.

இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது.

இதை அடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கக்கோரும் தீர்மானம் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 197 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் தடுத்தார் என்ற இரண்டாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 229 பேரும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான இரண்டாவது தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் ட்ரம்ப்பை பதவி விட்டு விலக்கும் தீர்மானம், செனட் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதிலும் ட்ரம்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறினால் டரம்ப்பின் பதவி பறிபோகும் அபாயம் எற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in