

இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இரு நாடுகளுக்கு இடையே (இந்தியா, பாகிஸ்தான்) மோதல் உருவாக வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெனிவாவில் நடந்த உலகளாவிய அகதிகள் மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் இம்ரான் கான் பேசும்போது, இந்தியா கடந்த வாரம் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர்சித்தார்.
இதில் இம்ரான் கான் கூறுகையில், “தெற்காசியாவில் வரவிருக்கும் அகதிகள் நெருக்கடி குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். பாகிஸ்தானில் அகதிகள் நெருக்கடி இருக்கும் என்று நாங்கள் கவலை கொள்ளவில்லை. இதன் காரணமாக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இரு நாடுகளுக்குக்கிடையே மோதல் உருவாக வழிவகுக்கும் என்று கவலை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையையும் இம்ரான் கான் விமர்சித்தார்.
முன்னதாக, மோடி தலைமையிலான இந்திய அரசு கடந்த வாரம் குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.