மலேசிய இஸ்லாமிய மாநாட்டை புறக்கணித்த இம்ரான் கான்; சவுதியின் நிர்பந்தம் காரணமா?

மலேசிய இஸ்லாமிய மாநாட்டை புறக்கணித்த இம்ரான் கான்; சவுதியின் நிர்பந்தம் காரணமா?
Updated on
2 min read

மலேசிய இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்பதில்லை என இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். இதற்கு சவுதி அரேபியா கொடுத்த நிர்பந்தமே காரணம் எனக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (ஓஐசி) செயல்பட்டு வருகிறது. இதில் சவுதி் அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதில் தெற்காசியாவைச் சேர்ந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தநிலையில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதும், அதன் மூலம் இஸ்லாமியர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள், விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக மலேசிய அரசு கோலாலம்பூர் உச்சி மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது. 'கேஎல் உச்சி மாநாடு 2019', இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓஐசி - OIC) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் சவுதி அரேபியாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்படும் ஈரான், கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய பங்காளர்களாக இடம் பெறுகின்றன. இதுமட்டுமின்றி தூரக்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவும் இதில் பங்கேற்கிறது. தங்கள் எதிரி நாடுகளை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துவதால் மலேசியோ மீது சவுதி அரேபியா அதிருப்தியடைந்துள்ளது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தானையும் இடம்பெறச் செய்ய மலேசியா தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டாயம் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் சவுதி இளவரசர் பின் சல்மான இம்ரான் கானை தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் சவுதியின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென இந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். இதற்கு சவுதி அரேபியா கொடுத்த நிர்பந்தமே காரணம் எனக் கூறப்படுகிறது. சவுதி மற்றும் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்தாக தெரிகிறது. எனினும் மலேசிய பிரதமர் மகாதீ்ர் முகமது இதனை மறுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் தான் இம்ரான் கான் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றும், இதில் சவுதி அரேபியாவின் பங்கு ஒன்றும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in