

தேச விரோத வழக்கில் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2016 ஆம் ஆண்டு முதல் முஷாரப், துபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் செவ்வாய்க்கிழமை முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முஷாரப் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், தேச விரோத வழக்கில் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் காலித் லோதி கூறும்போது, “ 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடன முடிவு, கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட கூட்டு முடிவு. இம்முடிவுக்கு ஒருவரை மட்டும் பொறுப்பாக்குவது சரியான நீதியாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
லோதி மட்டுமல்லாது பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலரும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.