

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இன்று அதிபர் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய நீண்ட கடிதத்தில் வரும் 2020 தேர்தலில் மக்கள் உங்களையும், அதிகார துஷ் பிரயோகத்தையும், ஜனநாயகக் கட்சியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அதிபர் ட்ரம்ப் ஆவேசமடைந்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக கடுன் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது எழுந்தன.
இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது.
இதை அடுத்து டிரம்ப்பை பதவியை விட்டு நீக்க திட்டமிட்டு, முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் இன்று கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 பேர் உள்ளனர். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 பேர் மட்டுமே உள்ளனர், எனவே கண்டனத் தீர்மானம் அங்கு நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. கண்டனத் தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினாலும் கூட அதிபர் ட்ரம்ப் பதவியை விட்டு விலக்குவது அமெரிக்க சட்டத்திட்டங்களின் படி அவ்வளவு எளிதல்ல, ஆனால் அடுத்த ஆண்டு தேர்தலில் தேசத் துரோகப் பட்டத்தை ட்ரம்ப் எதிர்கொண்டாக வேண்டியுள்ளது.
ஆனால் 100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டனத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, டிரம்பின் பதவி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் சபாநயகருக்கு எழுதிய கடிதத்தில் இந்த தீர்மானம் எந்த சட்டத்தின் கீழும் அடங்காது என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப் இதில் எந்த விதமான குற்றமும் இல்லை என்று சாடியுள்ளார்.
இது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான வெளிப்படையான யுத்தம் என்றும் எதிர்க்கட்சியினர் மீது டிரம்ப் தாக்குதல் தொடுத்துள்ளார். அதிகாரத்தை தாம் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ள டிரம்ப் வரலாறு உங்கள் தவறான நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது கடிதம் குறித்து நான்சி பெலோசி கூறும்போது, ‘நான் முழுதுமாக படிக்கவில்லை, ஆனால் அதன் சாராம்சம் என்னவென்பதைப் புரிந்து கொண்டேன், மிகவும் நோய்மையானது அவரது கடிதம்’ என்று அலுத்துக் கொண்டார்.