சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 22 பேர் பலி

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 22 பேர் பலி
Updated on
1 min read

சிரியாவில் இட்லிப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 22 பேர் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் பலர் குழந்தைகள்.

இதுகுறித்து சிரியாவில் இயங்கும் ஒயிட் ஹெல்மட் தன்னார்வ அமைப்பு கூறும்போது, “சிரியாவில் இட்லிப் பகுதியில் உள்ள மாரிட் அல் நுமன் மாவட்டத்தில் பொதுமக்கள் உள்ள பகுதியின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர். இதில் பலர் குழந்தைகள். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை அரசுப் படைகள் நடத்தி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள இட்லிப் போன்ற சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in