

ஜிம்பாப்வே துணை அதிபர் கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜிப்பாப்வே துணை அதிபர் கான்ஸ்டான்டினோவைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி மேரி முபைவா கைது செய்யப்பட்டுளார். மேலும் அவர் மீது பண மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேரி முபைவா திங்கட்கிழமை பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
தொழிலதிபரும், முன்னாள் மாடல் அழகியுமான மேரி முபைவா, கான்ஸ்டான்டினோவை மருத்துவ சிகிச்சைக்காக தென் ஆப்பிரிக்கா அழைத்துச் செல்லும்போது கொல்ல முயற்சித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதற்கு நீதிமன்றத்தில் மேரி முபைவா பதில் ஏதும் அளிக்கவில்லை. எனினும் விரைவில் இவ்வழக்கில் மேரி ஜாமீன் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை அவரது வழக்கறிஞரும் உறுதிப்படுத்தினார்.
மேலும், இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் 30-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜிம்பாப்வேவில் துணை அதிபரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.