

ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
ஈரானில் சில வாரங்களுக்கு முன்னர் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் எண்ணிக்கை 200 ஆக இருக்கலாம் என்று ஆம்னெஸ்டி முன்னர் தெரிவித்திருந்தது.
ஆம்னெஸ்டியின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்து வந்த நிலையில் ஈரான் போராட்டம் தொடர்பாக புதிய தகவலை தற்போது ஆம்னெஸ்டி வெளியிட்டுள்ளது.
ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயுரத்துக்கும் அதிகமானவர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் 304 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் அரசின் இந்த முடிவை ஈரான் மதத் தலைவர் அயத்தெல்லா காமெனி ஆதரித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
தற்போது ஈரானில் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதால் நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.