

பாகிஸ்தானில் உள்ள இளம்பெண்கள் சீனாவுக்கு மணப்பெண்களாக விற்கப்படுவதைத் தடுக்காத இம்ரான் கான் அரசை அந்நாட்டு சமூக ஆர்வலர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்கள் சீனாவுக்கு மணப்பெண்களாக விற்கப்பட்டு, அங்கு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காத இம்ரான் கான் அரசை அந்நாட்டு சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ராஹத் ஜான் அஸ்டின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராஹத் ஜான் அஸ்டின் கூறுகையில், “ பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி இந்தப் பிரச்சனையைப் புறக்கணிக்கிறார். இதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் அதிகமான பெண்கள், மணப்பெண்களாக சீனாவுக்கு விற்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.