

லண்டனில் நடந்த 2019-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் ஜமைக்கா நாட்டின் டோனி அன் சிங் உலக அழகியாக மகுடம் சூடப்பட்டார். இந்தியப் பெண் சுமன் ராவ் 3-வது இடத்தைப் பிடித்தார்
கடந்த ஆண்டு உலக அழகியான மெக்சிக்கோவின் வனேசா பொன்ஸ் முதலிடம் பிடித்த டோனி அன் சிங்கிற்கு உலக அழகியாக மகுடம் சூட்டினார்.
லண்டனில் உள்ள புறநகரான எக்ஸெல் லண்டனில் கடந்த நவம்பர் 24-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டிகள் நடந்து வந்தன. 111 நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.
இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சுமன் ராவ், ஜமைக்காவின் டோனி அன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஒப்ஸி மெஸினோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அறிவுத்திறனுக்கான போட்டியில் ஜமைக்காவின் டோனி அன் சிங் அனைவரும் ஏற்கும் விதத்தில் இருந்ததால், அவர் உலக அழகியாக வெற்றி பெற்று, பட்டத்தைக் கைப்பற்றினார்.
, மீடூ, பெண்களுக்கான மதிப்பு, சமத்துவம் ஆகியவற்றைப் பேசும் இன்றைய உலகில் பெண்களுக்கான அழகிற்கான மதிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நடுவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு 23 வயதான ஜமைக்கா பெண் டோனி அன் சிங் அளித்த பதிலில், " நான் சாதிப்பதோடு ஒப்பிடும்போது அழகிற்கு முக்கியத்துவம் குறைவுதான். நான் உருவாக்கும் மாற்றம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்களைப் பற்றி நாம் பேசுவதாக இருந்தால், அவர்களின் குழந்தைகளும், அந்த குழந்தைகளின் குழந்தைகளின் குழந்தைகளும் வேறுபட்ட மதிப்பைக் கொண்டிருப்பதாக உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஜமைக்காவில் பிறந்த டோனி அன் சிங்கின் தந்தை பிராட்ஷா சிங் கரீபியன் நாட்டைச் சேர்ந்தவர், தாய் ஜாஹ்ரின் பெய்லி ஆப்பிரிக்க கரிபியன் நாட்டைச் சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் மகளிர் மற்றும் உளவியல் குறித்துப் படித்து வருகிறார்.
உலக அழகியாக வெற்றி பெற்றது குறித்து இன்ஸ்டாகிராமில் டோனி அன் சிங் குறிப்பிடுகையில், " என் மீது நம்பிக்கை வைத்த ஜமைக்கா மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். என் மனது முழுவதும் அன்பும், நன்றியும் நிறைந்திருக்கிறது. என் மீது நான் நம்பிக்கை வைக்க எனக்கு ஊக்கமளித்தீர்கள். உலக அழகியாக பெருமைப்படுத்தப்பட மட்டுமல்ல, இந்தநேரத்தில் பணிவாகவும் இருக்கிறேன்.
என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் அன்பும், ஆதரவும் சேர்ந்துதான் என்னை இங்கு கொண்டுவந்தது.என் தாய்தான் என்னுடைய பலம்" எனத் தெரிவித்தார்
ஜமைக்கா நாட்டில் இருந்து உலக அழகிப் பட்டம் வெல்லும் 4-வது பெண் டோனி ஆவார். இதற்கு முன் கடந்த 1963, 1976, மற்றும் 1993-ம் ஆண்டுகளில் ஜமைக்கா பெண்களுக்கு அழகிப்பட்டம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் ராவ் இந்த ஆண்டு ஜூ்ன் மாதம் மிஸ் இந்தியாவாகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3-வது இடத்தைப் பிடித்தார்