Published : 14 Dec 2019 06:15 PM
Last Updated : 14 Dec 2019 06:15 PM

சர்வதேச விதிகளை மீறி ஈரான் மீது அமெரிக்கா தடை விதிக்கிறது: மலேசிய பிரதமர் விமர்சனம்

ஈரான் மீது அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறி பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதக் கடத்தலுக்கு உதவியதாக ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் மீதும் ஈரானின் கப்பல் நிறுவனம் மீதும் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்தது.

இந்த நிலையில் கத்தாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து மகதிர் முகமத் கூறும்போது, “ ஈரான் மீது ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா தடை விதித்து வருவதை நான் ஆதரிக்கவில்லை. ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடை சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தை மீறுவதாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x