

பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பெருமளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் உள்ளிட்ட பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.
இதனால் அவர் பதவி விலகி, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 358 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் தலா 7 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், பிரீத்தி படேல், அலோக் சர்மா, ஷைலாஷ் வரா, சுலா பிரவர்மன், மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றள்ளனர்.
பிரித்தி படேல் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய தலைவராக உள்ளார். அவர் வித்தம் தொகுதியில் 32.876 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் டோரிஸ் தொகுதியில் 36693 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ரீடிங் வெஸ்ட் தொகுதியில் அலோக் சர்மா 24393 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் மூன்று பேருமே போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இவர்களுக்க இந்தமுறையும் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர மேலும் சிலர் அமைச்சர் பதவி பெற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.