54 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மலையில் மோதியது

54 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மலையில் மோதியது
Updated on
1 min read

இந்தோனேசியாவில் இருந்து 54 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் மலையில் மோதியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் இருந்து ஓக்சிபில் என்ற நகருக்கு தனியார் பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 2.22 மணிக்குப் புறப்பட்டது. இதில் 49 பயணிகளும் விமானி உட்பட 5 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த விமானம் 3.16 மணிக்கு ஓக்சிபில் நகரில் தரையிறங்க வேண்டும். ஆனால் 2.55 மணி அளவில் ரேடாரில் இருந்து விமானம் திடீரென மாயமானது. இதைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

உள்ளூர் கிராம மக்கள் அளித்த தகவலின்படி பின்டாங் மலைப்பகுதியில் இந்தோனேசிய போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. சில மணி நேர தேடுதல் வேட்டையில் அடர்ந்த வனப்பகுதியில் விமானம் நொறுங்கி கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கியுள்ளது. அதில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். விபத்து நேரிட்ட பகுதியை சென்றடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்த பின்னரே முழுவிவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

மோசமான வானிலை நிலவுவதாலும் இரவு நேரம் என்பதாலும் விமானம் விழுந்த வனப் பகுதிக்கு மீட்புப் படையினர் உடனடியாக செல்ல முடியவில்லை. திங்கள்கிழமை காலைதான் மீட்புப் பணிகள் தொடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.விபத்துக்குள்ளான தனியார் விமானம் டிரைகானா ஏர் நிறுவனத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த நிறுவனம் சர்வதேச தர விதிகளை பூர்த்தி செய்யாததால் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் விமான சேவைகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in