

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதால் இந்தியா வரவிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே இடையே இருநாட்டு உறவு குறித்தான சந்திப்பு டிசம்பர் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களின் வசதிகேற்ப சந்திப்பு குறித்த தேதி வரும் நாட்களில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மூன்று நாள் அரசியல் ரீதியான இந்திய பயணத்தை வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் வியாழக்கிழமை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, இந்திய குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் குடியுரிமை திருத்த மசோதாவை பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.