Published : 13 Dec 2019 11:19 AM
Last Updated : 13 Dec 2019 11:19 AM

பிரிட்டன் தேர்தல் தோல்வி எதிரொலி; எதிர்காலத்தில் தலைமை தாங்கப் போவதில்லை - தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின்

எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல்களில் தொழிலாளர் கட்சிக்குத் தலைமை தாங்கப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்ற பிறகு, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத் தொடங்கியது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். 338 தொகுதிகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 172 இடங்களிலும் தொழிலாளர் கட்சி 120 இடங்களிலும் வென்றுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் எதிர்காலத்தில் நடக்க உள்ள தேர்தலுக்குத் தலைமை தாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் முடிவு குறித்து ஜெர்மி கோர்பின் கூறும்போது, “ இந்த இரவில் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகள் தொழிலாளர் கட்சிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்றார்.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாக செயல்பட்டார். ஆனால் அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

இந்நிலையில் பிரிட்டனின் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x