

பிரிட்டன் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்டிற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணும் பணி துவங்கியது. இதில் துவக்க நிலையில், கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலமை மாறி, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். 338 தொகுதிகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 172 இடங்களிலும் தொழிலாளர் கட்சி 120 இடங்களிலும் வென்றுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களைக் கைப்பற்றும் என்று வெளியானது.
போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றிப்பாதை குறித்துக் கூறும்போது, “பிரெக்ஸிட்டை நிறைவேற்ற கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். பிரெக்ஸிட் மட்டுமல்ல, நாட்டை ஒருங்கிணைத்து முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லவும் மக்கள் இந்த வாக்களிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தொழிலாளர் கட்சி தேர்தல் முடிவுகள் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது.