

குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்து மேலாதிக்க எண்ணத்துடன் மோடி தலைமையில் இந்தியா நகர்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது. குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் பொருட்டு புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
இந்தியா, மோடியின் தலைமையின் கீழ் இந்து மேலாதிக்க எண்ணத்துடன் திட்டமிட்டு நகர்கிறது. சட்டவிரோத ஆக்கிரமிப்பில் தொடங்கி, காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்து சேர்த்துக் கொண்டது. அசாமில் 20 லட்சம் மக்கள் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது, தற்காலிகமாக முகாம்கள் அமைத்தது. இப்போது குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் மிகப்பெரிய ரத்தக்களறிக்கு இட்டுச் சென்று, உலகில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம். கால தாமதமாகும் முன் உலக நாடுகள் கண்டிப்பாக இதில் தலையிட வேண்டும்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது கும்பல் வன்முறையும் சேர்ந்துள்ளது. சர்வதேச சமூகம் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். ஜெர்மனியின் நாசி இன மேலாதிக்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் செயல்பட்டதால் 2-ம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. மோடியின் இந்து மேலாதிக்க எண்ணமும் சேர்ந்து, பாகிஸ்தானுக்கு அணு ஆயுத அச்சுறுத்தல் அளிக்கிறது''.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளார் ராவேஷ் குமார் கூறுகையில், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதே பாகிஸ்தான் பழக்கமாக வைத்துள்ளது. இப்படி அவசரப்பட்டு அறிக்கை விடுவதற்குப் பதிலாக, இம்ரான் கான் தன்னுடைய நாட்டில் உள்ள மதச்சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்