

ரோஹிங்கியா முஸ்லிகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் எங்கள் நாட்டுக்கு எதிராக முழுமையற்ற மற்றும் தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.
இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆங் சான் சூச்சி உலக அரசியலில் விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தி இனப்படுகொலை உடன்படிக்கையை மீறியதாக ஆப்பிரிக்க நாடான காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் அவ்வழக்கு தொடர்பாக புதன்கிழமை சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக வாதாடினார்.
அதில் சூச்சி கூறியதாவது, “ ராக்கைன் மாகாணத்தில் நடத்தது சிக்கலானது . முழுமையாக புரிந்து கொள்ள முடியாதது. காம்பியா ராக்கைன் மாகாணத்தில் நடந்தது பற்றி முழுமையில்லாத தவறான தகவலை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.