

ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானத் தளத்தின் அருகே இன்று (புதன்கிழமை) சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தாக்குதல்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில் தலிபான்கள் மீது ஆப்கன் அரசு தாக்குதலை நடத்தி வருகிறது.