Published : 21 Aug 2015 06:56 PM
Last Updated : 21 Aug 2015 06:56 PM

ஹூரியத்தை சந்திக்க வேண்டாம் என்ற இந்திய ஆலோசனையை ஏற்க மாட்டோம்: பாகிஸ்தான்

தேசிய பாதுகாப்பு செயலர் மட்ட பேச்சு வார்த்தைகளுக்காக டெல்லி வருவோம், ஆனால் அதற்கு விதிக்கப்படும் முன்நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதேபோல் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம் என்ற இந்திய ஆலோசனையையும் ஏற்கத் தயாராக இல்லை என்று பாகிஸ்தான் கறாராக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்புச் செயலர் ஹூரியத் தலைவர்களை சந்திப்பது சரியல்ல என்று இந்தியா கருத்து தெரிவித்ததையடுத்து பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அயலறுவவு அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “எங்களுடனான உரையாடலுக்கான நிபந்தனைகளை இந்தியா விதிப்பது, பாகிஸ்தானுடன் எந்த வித அர்த்தபூர்வ பேச்சுவார்த்தைகளையும் அறிவுறுத்துவதாக இல்லை.

பாகிஸ்தான் அயலுறவு செயலர், இந்திய தூதரிடம் இது பற்றி தெளிவாகவே கூறியுள்ளார், அதாவது, 'காஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகளான ஹூரியத் தலைவர்களை' சந்திக்க வேண்டாம் என்ற இந்திய அறிவுரையை ஏற்க முடியாது என்று தெரிவித்து விட்டார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண்பதில் உண்மையான பங்குள்ளவர்கள் ஹூரியத் என்றும் அவர் தெரிவித்து விட்டார்” என்று கூறினார்.

மேலும், பாகிஸ்தான் தலைமை இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஹூரியத் தலைமையை சந்திப்பது வழக்கம். 'இந்த நீண்ட நாளைய செயல்பாட்டை இப்போது விட்டுவிடுவதற்கான அவசியம் இருப்பதாக தாங்கள் கருதவில்லை’ என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பை தடுக்கவே பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா-வை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவுகிறது. சையத் ஷா கீலானி ஏற்கெனவே வீட்டுக் காவலில்தான் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x