Published : 09 Dec 2019 07:11 PM
Last Updated : 09 Dec 2019 07:11 PM

வைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு

காணொலியில் மிரட்டும் பெண்ணின் காட்சி, அருகில் பாதிக்கப்பட்ட குழந்தை.

மூத்த தாரத்தின் 9 வயதுக் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி மிரட்டி, மன உளைச்சலை ஏற்படுத்தும் இளம்பெண்ணின் காணொலி வைரலானது. யார் அவர் எனத் தேடி வந்த நிலையில் அவர் மலேசியப் பெண் என்பதும் அவர் கைது செய்யப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலானது. பார்த்தவர்கள் நெஞ்சம் பதைபதைத்து மற்ற குரூப்களிலும் ஷேர் செய்து அந்தக் குழந்தையை மீட்க உதவி கேட்டனர்.

அப்படி என்னதான் இருந்தது அந்தக் காணொலியில்?

சிறுமி ஒருவர் பயத்துடனும் பதற்றத்துடனும் அமர்ந்துள்ளார். அவரருகே கையில் சிறிய கத்தியுடன் அமர்ந்திருக்கும் பெண் குழந்தையை மிரட்டும் தொனியில் பேசினார்.

அதில் பேசும் பெண், ''உனக்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. எனக்கு என் மகன் மட்டும்தான். நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. புரியுதா? உன் அப்பன் சொன்னதுக்காக இங்க இருக்க. நீ ஒரு பொணம். நீ என் வயிற்றில் பிறந்தாயா? இல்லை. அப்புறம் அப்படியே போயிடணும். அம்மா, தம்பின்னு ஏதாவது சொந்தம் கொண்டாடிக்கொண்டு வந்த சங்க அறுத்துட்டு போய்க்கிட்டே இருப்பேன்'' என்று மிரட்டுவார்.

அந்தச் சிறுமி மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதை வீடியோ எடுத்தது மிரட்டும் பெண்ணின் தம்பி எனத் தெரிகிறது. அடுத்த காட்சியில் வீடியோ எடுத்த சிறுவன் அறைக்கதவை அக்கா, அக்கா எனத் தட்டுகிறான், அந்தப் பெண் கதவைத் திறக்கிறார்.

உள்ளே காணும் காட்சி நம்மை உறைய வைக்கிறது. 9 வயதுச் சிறுமியை கட்டில் ஓரம் வைத்து அந்தப் பெண் தாக்குவதும், அச்சிறுமி கதறி அழுவதும் கேட்கும். கட்டிலில் அந்தப் பெண் பெற்ற சிறிய ஆண் குழந்தை இருக்கும்.

குழந்தைகள் அமைப்பினர் விசாரணையில் மாற்றாந்தாய்

அடுத்து சிறுமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்து வந்து ரூமுக்கு வெளியே அந்தப் பெண் தள்ளுவார். 2 நிமிடங்கள் ஓடும் இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் கோபப்பட்டனர், கலங்கினர்.

ஆனால் இந்த வீடியோவின் முழுமையான காட்சி 16 நிமிடங்கள். அதை மொத்தமாகப் பார்த்தால் அவ்வளவு கொடுமையாக இருந்தது என்கிறார்கள் மலேசிய போலீஸார். சம்பந்தப்பட்ட பெண் தமிழில் பேசுவதால், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரை எப்படியாவது கண்டுபிடித்துக் கைது செய்யுங்கள், குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று பலரும் பதைபதைப்புடன் கோரிக்கை வைத்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் கைது நடவடிக்கையில் மாற்றாந்தாய்

இந்த வீடியோவில் வரும் அபார்ட்மென்ட் மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஜின்ஜாங் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஆகும். 16 நிமிடக் காணொலி வைரலானதை அடுத்து கோலாலம்பூர் சிஐடி போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். அவரைக் கைது செய்த மலேசியக் குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை விசாரணை அமைப்பு அவர் மீது மலேசியக் குழந்தைகள் வன்கொடுமைச் சட்டம் 31(1) D-2011-ன் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையின் உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்களின் வாக்குமூலத்தை போலீஸார் சேகரித்து வருகின்றனர். 16 நிமிடக் காணொலியும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோலாலம்பூர் சிஐடி பிரிவு தலைவர் ருஷ்டி முஹமதி இஷா கூறுகையில், ''குழந்தையைக் கொடுமைப்படுத்தும் 16 நிமிடக் காணொலி மலேசியா முழுவதும் வைரலானது. அதையடுத்து வந்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 9 வயதுச் சிறுமியின் மாற்றாந்தாயான 22 வயதான பெண்ணைக் கைது செய்துள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

அவரைக் கைது செய்யும் காணொலியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் பலரும் அவரது செயலைக் கண்டிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x