

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் கோபமடைந்தார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார்.
இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதைச் செய்யாவிட்டால் உக்ரைனுக்கு வழங்கப்படும் தீவிரவாத ஒழிப்பு நிதியை நிறுத்தி விடுவோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அதிபர் ட்ரம்ப் நெருக்கடி கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
மேலும், இது தொடர்பாக அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளார் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் மீது கண்டனத் தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோ பிடெனிடம் நபர் ஒருவர், உக்ரைன் தொடர்பாக அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த பிடென், அந்த நபரைப் பார்த்து, ''நீங்கள் மிகப் பெரிய பொய்யர்'' என்றார். மேலும் அந்த நபரை உடற்பயிற்சி செய்ய மேடைக்கு அழைத்தார். “நீங்கள் முதலில் ஐ.க்யூ சோதனை செய்யுங்கள்” என்று கடுமையாக விமர்சித்தார் ஜோ பிடென்.