

பிலிப்பைன்ஸைத் தாக்கிய கம்முரி புயலுக்கு இதுவரை 10 பேர் பலியானதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை கூறும்போது, “பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் கம்முரி புயல் தாக்கியது. இதன் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கம்முரி புயல் காரணமாக இதுவரை 10 பேர் வரை பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், கம்முரி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்முரி புயல் காரணமாக மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். மேலும் இப்புயல் தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும் என்று பிலிப்பைன்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸை இந்த ஆண்டு தாக்கிய 20-வது புயல் கம்முரி புயலாகும்.