Published : 04 Dec 2019 04:27 PM
Last Updated : 04 Dec 2019 04:27 PM

அதிபர் போட்டியிலிருந்து விலகல்: கமலா ஹாரிஸைக் கிண்டல் செய்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து விலகிய கமலா ஹாரிஸை ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான தேர்வு தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தவர்.

கடந்த ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்ப்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்தான் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறங்க முடியும்.

தொடக்கத்தில் கமலா ஹாரிஸுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதியையும் அவர் வேகமாகத் திரட்டினார். நாளடைவில் ஆதரவு குறைய, தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தேவையான நிதி கிடைக்காததால் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனை அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ''மிகவும் மோசம். நிச்சயம் உங்களை மிஸ் பண்ணுவோம் கமலா'' என்று கிண்டல் செய்திருந்தார்.

அதற்கு கமலா ஹாரிஸ், “கவலைப்பட வேண்டாம் அதிபர். உங்களை விசாரணையில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x