

சூடான் தலைநகர் கார்ட்டூமில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி மற்றும் தீ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் பலியானதாகவும் 130 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அமைந்துள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இதில் இந்தியர்கள் மட்டுமே 50 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை நடந்த இவ்விபத்தில் உயிரிழந்த 23 பேரில் இந்தியர்களும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் பெயர்கள் முழுவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவத்தை நேரில் பார்வையிட தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் மதானி அப்பாஸ் மற்றும் கார்ட்டூம் கவர்னர் மொஹமட் அப்தெல் - ரஹ்மின் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளதாவது:
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அமைந்துள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென எரிவாயு டேங்கர் வெடித்தது. இதில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 23 பேர் பலியாகினர். மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கார்ட்டூம், வடக்கு கார்ட்டூம் மற்றும் ஓம்துர்மன் நகரங்களில் உள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
செராமிக் டைல்ஸ் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக, எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்கரிலிருந்து எரிவாயுவை எடுக்கும் போது திடீரென டேங்கர் வெடித்தது. எரிபொருள் வாயு பீங்கான் தொழிற்சாலையின் பிற பகுதிகளைத் தாக்கியதால் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.
கறுப்பு புகை மற்றும் தீப்பிழம்புகள் விண்ணை நோக்கி உயர்ந்ததால், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர், இதனால் தொழில்துறை மண்டலத்தில் பீதி ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர், அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவுவதைத் தடுக்க அவசர சேவைகள் போராடின.''
இவ்வாறு காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்தார்.