Published : 04 Dec 2019 11:39 AM
Last Updated : 04 Dec 2019 11:39 AM

அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியிலிருந்து விலகினார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்திருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான தேர்வு தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்.

குறிப்பாக, ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்ஸிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் வலுவாக அவர் குரல் கொடுத்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்ப்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்தது.

இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்தான் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க முடியும்.

ஆரம்பத்தில் கமலா ஹாரிஸுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதியையும் அவர் வேகமாக திரட்டினார்.

நாளடைவில் ஆதரவு குறைய தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கான தேவையான நிதி கிடைக்காததால் அதிபர் தேர்தலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எனது ஆதரவாளர்களே ஆழ்ந்த வருத்ததுடன் எனது பிரச்சாரத்தை நிறுத்தி வைக்கிறேன். ஆனால் நான் உங்களிடம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் மக்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன், சென்னையைச் சேர்ந்தவர். கமலாவின் தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் முதல் ஆப்பிரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x