Published : 03 Dec 2019 06:45 PM
Last Updated : 03 Dec 2019 06:45 PM

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான்

ஈரானில் கடந்த மாதம் ஏற்பட்ட போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட கலகக்காரர்களை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த மாதம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஈரான் மூத்த மத தலைவர் காமெனியும் ஆதரித்தார்.

ஆனால், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பலர் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஈரான் அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி தெரிவித்தது.

ஆம்னெஸ்டியின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில் ஈரானில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் கொல்லப்பட்டனர் என்றும் இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர் என்றும் ஈரான் அரசு ஊடகம் தரப்பில் முதன்முதலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிகாரிகளும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை முதன்முதலாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஈரானில் சில வாரங்களாக போராட்டம் கட்டுக்குள் வந்த நிலையில் இன்னும் அங்கு இணைய இணைப்பு சேவை முழுமையாக பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x