

இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தியின் ராஜினாமாவை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
மேலும் இராக்கில் நடக்கும் தொடர் கலவரங்கள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்தரெஸ் வருத்தம் தெரிவித்தார். இராக்கின் ஷியா மதகுருமார்களும் இராக் பிரதமர் மஹ்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இராக்கில் நடக்கும் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில் அப்துல் மஹ்தியின் ராஜினாமாவை இராக் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
அப்துல் மஹ்தியின் ராஜினாமாவுக்குப் பிறகும் இராக்கில் ஆங்காங்கே வன்முறை நீடித்து வருகிறது.