Published : 02 Dec 2019 05:17 PM
Last Updated : 02 Dec 2019 05:17 PM

WWE விரிவாக்கத்தில் இந்தியாவுக்கு முக்கிய இடம்: ட்ரிபிள் ஹெச் தகவல்

WWE விரிவாக்கத்தில் இந்தியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்று ட்ரிபிள் ஹெச் தெரிவித்துள்ளார்

பால் மைக்கல் லெவஸ்கீ என்று சொல்வதை விட ட்ரிபிள் ஹெச் என்று சொன்னால்தான் ரெஸ்ட்லிங் ரசிகர்களுக்குத் தெரியும். அதிலும் நிகழ்ச்சியில் ட்வைன் ஜான்சனின் (தி ராக்) பரம எதிரியாகப் பிரபலமானவர். ஐம்பது வயதான ட்ரிபிள் ஹெச் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தத் துறையில் செயல்பட்டு வருகிறார்.

ரெஸ்ட்லிங் வீரராக இருப்பதோடு தற்போது நடிகராக, WWE அமைப்பில் புதிய திறமைகளைத் தேடும் பொறுப்பிலும், பொது நிகழ்ச்சிகளுக்கும் நிர்வாகத் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் NXT என்கிற புதிய நிகழ்ச்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். WWE-ன் தலைமை பிராண்ட் அதிகாரி ஸ்டெஃபானி மெக்மஹோனைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

2017-ல், புதுடெல்லியில் WWE லைவ் சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் ட்ரிபிள் ஹெச் (பால் மைக்கல் லெவஸ்கீ) பங்கேற்றிருந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை WWEன் திட்டம் என்ன என்று சமீபத்தில் ட்ரிபிள் ஹெச் பேசியுள்ளார்.

"கடந்த முறை நான் இந்தியா வந்தது மிக அற்புதமான அனுபவம். WWE நிகழ்ச்சிக்கு இந்திய மக்களின் தொடர் ஆதரவுக்கு நான் நன்றி கூற வேண்டும். இது ஒரு அற்புதமான இடம். நாங்கள் எங்கள் பிரதிநிதிகளை அவ்வப்போது இந்தியாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். சார்லட் ஃப்ளேர் இந்தியாவின் மீது, இந்திய மக்களின் மீது காதல் வயப்பட்ட பிறகு இப்போதுதான் திரும்பியுள்ளார். இந்தியாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள். நானும் இந்தியா வர ஆர்வமாக உள்ளேன்.

எங்கள் (WWE) விரிவாக்கத்தில் இந்தியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இங்கும் சில சவால்கள், தடைகள் இருக்கின்றன. ஆனால் இங்கு ஒரு அமைப்பைத் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறோம். உள்ளூரிலிருந்து WWE-கான திறமைகளைத் தேடும் முயற்சியையும் தொடங்கவுள்ளோம்.

அடிக்கடி சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நடத்துவது எங்கள் நீண்ட காலத் திட்டத்தில் உள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்தில் ஆரம்பித்துவிட்டோம். இந்தியா கண்டிப்பாக அந்தப் பட்டியலில் இருக்கிறது" என்று ட்ரிபிள் ஹெச் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x