

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் மட்டுமே இயற்றப்பட வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை என்பதைப் போல் அதனை தன் காதலை சொல்லும் அரங்கமாக மாற்றியிருக்கிறார் இத்தாலியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர்.
இத்தாலி நாட்டு லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ளாவியோ டி முர்ரோ (33). இவர் கடந்த வியாழக்கிழமையன்று பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்துவது தொடர்பாக இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றிருந்தார்.
விவாதத்தின் போது இடைமறித்து கருத்து சொல்ல அவகாசம் கோரும் வாய்ப்பைப் பயன்படுத்த அனுமதி கோரினார் முர்ரோ. சரி ஏதோ கேள்விதான் வருகிறது என உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க, அவரோ தனது மேஜையினுள் இருந்து ஒரு பரிசுப் பெட்டியை எடுத்து அதிலிருந்த சிறு மோதிரத்தைக் காட்டினார்.
அங்கு என்ன நிகழ்கிறது என யாருக்கும் புரியவில்லை. அந்த மோதிரத்தை உயர்த்திப் பிடித்து பார்வையாளர் அரங்கில் இருந்த எலிஸா டி லியோ என்ற இளம் பெண்ணை நோக்கி பேச ஆரம்பித்தார்.
"நான் பார்வையாளர் அரங்கில் இருக்கும் எலிஸாவுக்காக இதைச் சொல்கிறேன். எலிஸா இந்த நாள் மற்ற நாட்களைப் போல் சாதாரணமான நாள் அல்ல. நான் உன்னை காதலிக்கிறேன்" என்றார். அதற்கு எலிஸாவும் "காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.
இந்த ஜோடி கடந்த 6 ஆண்டுகளாக வடக்கு இத்தாலியின் வென்டிமிகிலியா நகரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது காதலை நாடாளுமன்றத்தில் வைத்து வெளிப்படுத்திய எம்.பி. டி முர்ரோ, "எலிஸா எனக்கு மிகவும் முக்கியமானவர். நெருக்கமானவர்.
அவர் தனிப்பட்ட முறையிலும் சரி அரசியல் ரீதியாகவும் சரி என்னுடனேயே பயணித்திருக்கிறார். அதனால் அவருக்கு எனது காதலை நாடாளுமன்றத்தில் வைத்துச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்" என்றார்.
அவர் காதலைச் சொல்லி முடிக்க அரங்கமே கரகோஷம் எழுப்பியது.
இருப்பினும் சபாநாயகர் ராபர்ட் ஃபிகோ, "உங்களின் உணர்வுகள் எனக்குப் புரிகிறது ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இவ்வாறு இடையூறு செய்வதை ஏற்க இயலாது" என்றார்.
ஆனால், சக எம்.பி.க்களோ தங்களின் இருக்கைகளின் இருந்து எழுந்து வந்து டி முரோ - எலீஸா தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.