

இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் 45 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில் ”இராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 45 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
தொடர்ந்து நடக்கும் வன்முறை காரணமாக பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராக்கின் தென் பகுதியில் இருக்கும் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் புதன்கிழமை இரவு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டிடத்துக்குத் தீ வைத்தனர்.
அக்டோபர் மாதம் முதல் இராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகியுள்ளனர்.போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.