இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வந்தடைந்தார்

இந்தியா வந்தடைந்த கோத்தபய ராஜபக்ச
இந்தியா வந்தடைந்த கோத்தபய ராஜபக்ச
Updated on
1 min read

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ இலங்கை அதிபராக இம்மாதம் பதவி ஏற்றவுடன் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) இந்தியா வந்தடைந்தார் கோத்தபய ராஜபக்ச. டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கோத்தபய ராஜபக்ச நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி - கோத்தபய ராஜபக்ச சந்திப்பில் பிராந்திய நிலவரம் மற்றும் இரு நாடுகள் உறவுகள் சார்ந்த முக்கிய ஆலோசனைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்திய சுற்றுப்பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்ச கூறுகையில், ''இலங்கை - இந்தியா இரு நாடுகள் இடையே உள்ள இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச. வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இந்தியா வருவதற்கும் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் கோத்தபய ராஜபக்ச, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in